சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. ஆட்சேபம்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. ஆட்சேபம் தெரிவித்தது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மாயபெருமாள் ஆஜராகி, சாத்தான்குளம் வழக்கில் முக்கிய சாட்சிகளான பெண் போலீஸ் ரேவதி, பியூலா உள்ளிட்டவர்கள் தங்களது சாட்சியத்தை கோர்ட்டில் பதிவு செய்து விட்டனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என வாதாடினார்.
பின்னர் சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஜாமீனில் வெளியே வந்தால் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார். இதேபோல ஜெயராஜின் மனைவி செல்வராணியின் வக்கீலும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.