சாட்டிலைட் போனுடன் வாலிபர் சிக்கினார்


சாட்டிலைட் போனுடன் வாலிபர் சிக்கினார்
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் சாட்டிலைட் போனுடன் வாலிபர் பிடிபட்டார். இந்த போன் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பாம்பனில் சாட்டிலைட் போனுடன் வாலிபர் பிடிபட்டார். இந்த போன் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

சாட்டிலைட் போன்

சாதாரண ேபானுக்கும், சாட்டிலைட் (செயற்கைக்கோள்) போனுக்கும் வித்தியாசம் உள்ளது. சாட்டிலைட் போன் மூலம் ஒருவரது செல்போன் எண்ணுக்கு போன் செய்தால் எந்த ஒரு நம்பரும் செல்போனில் காண்பிக்காது.

அதனால் யார் போன் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஒரு நாட்டில் இருந்து இன்ெனாரு நாட்டுக்கு பொருட்கள், தங்கம், போதைப்பொருள் கடத்துபவர்களிடம் இதுபோன்ற சாட்டிலைட் போன்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

வெகுதூரம் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய அனுமதியின்பேரில், அவர்களது பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதும் உண்டு எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றபடி யாருக்கும் சாட்டிலைட் போன் பயன்படுத்த அனுமதி கிடையாது.

வாலிபர் சிக்கினார்

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் பகுதியில் ஒருவர் சாட்டிலைட் போன், உரிய அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு பிரிவினர், பாம்பன் குந்துகால் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கிப்பிடித்தனர். அவர், பாம்பன் புயல் காப்பகம் பகுதியை சேர்ந்த ஜான்பால் (வயது 25) என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாட்டிலைட் போனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பையை முழுமையாக சோதித்ததில் இலங்கையைச் சேர்ந்த சுந்தரசவுந்தர் என்பவர் பெயர் கொண்ட குடியுரிமை அடையாள அட்டை, இலங்கை பணம் ரூ.10,000 ஆகியவை இருந்தன.

தொடர்ந்து ஜான்பாலிடம் நடத்திய விசாரணையில் பாம்பன் குந்துகால் பகுதியில் இந்த பை கீழே கிடந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இலங்கையில் இருந்து வந்ததா?

இது பற்றி போலீசார் கூறும் போது, பிடிபட்ட ஜான்பால் அந்த சாட்டிலைட் போனிலிருந்து தனது செல்போன் எண்ணுக்கு போன் செய்துள்ளார். இவர் போன் செய்யவும் ராமேசுவரம் பகுதியில் உள்ள தொலைதொடர்பு சாதனங்கள் மூலம், இந்த பகுதியில் சாட்டிலைட் போன் பயன்படுத்தப்படுவதாக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு சிக்னல் சென்றுள்ளது. அதன்பேரில் ஜான்பாலை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கையிலிருந்து வந்த நபர், அவரிடம் இந்த சாட்டிலைட் போனை கொடுத்துவிட்டு தப்பி சென்றாரா? அல்லது வேறு வழியில் இவருக்கு கிடைத்ததா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.


Next Story