சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லை பூ கிலோ ரூ.2,000-க்கு ஏலம் ஒரே நாளில் 340 ரூபாய் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
விவசாயிகள் மகிழ்ச்சி
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் முல்லை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஒரே நாளில் 340 ரூபாய் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பூ மார்க்கெட்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது.
நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
முல்லை பூ ரூ.2,000
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,750-க்கும், முல்லை ரூ.2000-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.71-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.510-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,802-க்கும், முல்லை ரூ.1,660-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.66-க்கும், பட்டுப்பூ ரூ.115-க்கும், ஜாதிமல்லி ரூ.1000-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்றுமுன்தினத்தை விட நேற்று முல்லை பூ கிலோவுக்கு ரூ.340-ம், காக்கடா ரூ.25-ம், கனகாம்பரம் ரூ.10-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது. ஒரே நாளில் முல்லை பூ கிலோ ரூ.340 விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், 'நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ வரத்து அதிகமாக இருந்ததால் அதன் விலை ரூ.52 குறைந்து விற்பனை ஆனது. அதே வேளையில் முல்லை பூ வரத்து குறைந்திருந்தது. மேலும் முல்லை பூவின் தேவை அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் போட்டி போட்டு முல்லை பூவை ஏலத்தில் எடுத்தனர். இதன்காரணமாக முல்லை பூ விலை உயர்ந்து விற்பனை ஆனது,' என்றனர்.