சத்தியமங்கலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது
மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய டிரைவர் கைது
சத்தியமங்கலத்தில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புசுவர் மீது மோதி கவிழ்ந்தது. மதுபோதையில் லாரி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
லாரி கவிழ்ந்தது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது. திடீரென அந்த லாரி தாறுமாறாக ஓடியது. அப்போது அந்த லாரி ஒரு வளைவில் திரும்பியபோது அங்கிருந்த சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் சிக்னல் விளக்கு உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரி நிலைதடுமாறி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர்மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் லாரியில் இருந்து கரும்புகள் சரிந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் டிரைவருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. மேலும் மாற்று லாரி கொண்டு வரப்பட்டு அதில் கரும்புகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சத்தியமங்கலத்தை சேர்ந்த சரவணன் (வயது 30) என்பதும், மதுபோதையில் லாரியை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.