சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா தொடங்கியது. முதல் நாள் யாக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா தொடங்கியது. முதல் நாள் யாக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சட்டைநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று தொடங்கியது.
3 நாள் நடைபெற உள்ள இந்த விழாவின் முதல் நாளான நேற்று ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், குணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
புனிதநீரால் அபிஷேகம்
இதையொட்டி புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. இதன் முடிவில் ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தமிழ்ச் சங்க தலைவர் மார்கோனி, திருப்பணி உதயதாரர் முரளிதரன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், கோவி நடராஜன், முன்னாள் நகரசபை உறுப்பினர் மாரிமுத்து, பாலசுப்பிரமணியன், விசுவ இந்து பரிசத் நிர்வாகி செந்தில் குமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில் செய்திருந்தார்.