ஆசிய அளவிலான யோகா போட்டியில் சாயல்குடி பிளஸ்-2 மாணவி 3-ம் இடம்


ஆசிய அளவிலான யோகா போட்டியில் சாயல்குடி பிளஸ்-2 மாணவி 3-ம் இடம்
x
தினத்தந்தி 30 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 6:46 PM GMT)

ஆசிய அளவிலான யோகா போட்டியில் சாயல்குடி பிளஸ்-2 மாணவி 3-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் பாராட்டினார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே எம்.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வில்வ சாந்தி செந்தூரான். இவர்களது மகள் வில்வமுத்தீஸ்வரி. கடலாடி மலட்டாறு விலக்கு ரோட்டில் உள்ள வி.வி. எஸ்.எம். நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தாய்லாந்து பாங்காங்கில் நடைபெற்ற ஆசியன் யோகாசன ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-ம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

இதை தொடர்ந்து அவர் சொந்த ஊர் திரும்பினார்.சாயல்குடியில் இருந்து எம்.கரிசல்குளம் கிராமம் வரை பொதுமக்கள் திரளாக வந்து அவருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பின்பு மலட்டாறு வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சிக்கு தாளாளர் சந்திரா தலைமை தாங்கினார். முதல்வர் அங்காள ஈஸ்வரி முன்னிலை வகித்தார்.

பள்ளி நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி, மாணவி வில்வமுத்தீஸ்வரி கொண்டு வந்த பதக்கம் சான்றிதழ் வைத்து பாராட்டி பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியின் போது ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

பின்பு கடலாடியில் கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் எம்.கரிசல்குளம் கிராம பொதுமக்கள் முன்னிலையிலும் கடலாடியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து பள்ளி மாணவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியின் போது கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன், கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் ஊராட்சி மன்ற தலைவர்கள் கடலாடி ராஜமாணிக்கம், லிங்கம், ஒருவானேந்தல் சீதா நாகராஜன், கடுகு சந்தை காளிமுத்து, பிள்ளையார் குளம் கூட்டுறவு தலைவர் காளிமுத்து, மறவர் கரிசல்குளம் சண்முக போஸ், அ.ம.மு.க. கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினர்.


Related Tags :
Next Story