விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ரூ.62 லட்சம் மோசடி
விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ.62 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,
காஞ்சீபுரம் தோப்பு தெரு, விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 35). இவர், காஞ்சீபுரம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரிடம் ஆவடியை அடுத்த சேக்காடு மேட்டுத்தெருவைச் சேர்ந்த வேலு (52) என்பவர் இந்திய விமானப் படையில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதை நம்பிய தனசேகரன், இதற்காக ரூ.17 லட்சத்தை வேலுவிடம் கொடுத்தார். ஆனால் சொன்னது போல அவர் வேலை வாங்கி தராமல் மோசடி செய்து விட்டார்.
இது குறித்து தனசேகரன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி உதவி கமிஷனர் கந்தகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
ரூ.62 லட்சம் மோசடி
விசாரணையில் வேலுவின் உறவினர், இந்திய விமானப்படையில் வேலை செய்வதாகவும், அதை வைத்து தனக்கு உள்ளே வேலை வாங்கித் தருவதற்கு ஆட்கள் இருக்கின்றனர். ஆகவே தன்னிடம் பணம் கொடுத்தால் விமானப்படையில் பல்வேறு வேலைகளை வாங்கி தருவதாக கூறி தனசேகரன் உள்பட விழுப்புரம், ராமாபுரம், சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 பேரிடம் ரூ.62 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த வேலுவை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.