சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு: அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி-தற்காலிக பணியாளர், திருநங்கைகள் 2 பேர் கைது
அரசு நிதி உதவி திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக பெண் பணியாளர், திருநங்கைகள் 2 பேர் என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டம்
சேலம் தெற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக பணியாற்றி வருபவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் இருந்து முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதி உதவி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு வரவு வைக்கப்படும் அரசு நிதி முறையாக வரவு வைக்கப்படுகிறதா? என்று சென்னையில் மாநில கணக்காளர் அலுவலகத்தில் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். கடந்த 2020-ம் ஆண்டில் சேலம் தெற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் இருந்து பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள நிதி குறித்து தலைமை கணக்காளர் அலுவலகத்தில் தணிக்கை செய்யப்பட்டது.
தற்காலிக பெண் பணியாளர்
அப்போது இந்த அலுவலகத்தில் இருந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நிதி உதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை கணக்காளர் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி சமூக நலத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்ட பணபரிவர்த்தனை பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது முறைகேடு நடந்த தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய தற்காலிக பெண் பணியாளர் பவித்ரா (வயது 21), அரசு நிதி உதவி பெற்று வரும் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்த திருநங்கை சாந்தி (23), குகை பகுதியை சேர்ந்த திருநங்கை மாதம்மாள் (40) ஆகியோர் வங்கி கணக்கில் முறைகேடாக மொத்தம் ரூ.89 லட்சம் வரவு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் தமிழ்முல்லை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்காலிக பணியாளர் பவித்ரா, திருநங்கைகள் சாந்தி, மாதம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைதான பவித்ரா பிளஸ்-2 வரைதான் படித்துள்ளார். அவரை தாலுகா அலுவலக உயர் அதிகாரிகள்தான் நியமித்து இருக்கிறார்கள். 12-ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு பெண் இவ்வளவு துணிகர மோசடியில் ஈடுபட முடியுமா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முறைகேடு குறித்து குற்றப்பிரிவு போலீசார் தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே தற்காலிக பணியாளர் பவித்ரா மற்றும் 2 திருநங்கைகள் வங்கி கணக்கில் மட்டும் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதால் இதில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
3 பேர் வங்கி கணக்கிற்கு மட்டும்
மேலும் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களுக்கான உதவித்தொகை 3 பேரின் வங்கி கணக்கிற்கு மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனவே உதவித்தொகைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நபர்களின் விண்ணப்ப மனுவில், இவர்கள் 3 பேரின் வங்கி கணக்கு மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவேதான் அவர்கள் அனைவரது உதவித்தொகை பணமும் இவர்கள் 3 பேரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அது எப்படி நடந்தது. இதனை சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என பல்வேறு கேள்விகள் போலீசாருக்கு எழுந்துள்ளன.
சுமார் ரூ.89 லட்சம் வரை மோசடி நடந்த இந்த சம்பவம் சேலம் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.