தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பல லட்சம் மோசடி
கோவை, ஏப்.9-
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியார் மில் ஊழியர் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர்.
சமூக வலைத்தளம்
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தனியார் மில் நிறுவன ஊழியர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நெல்லையை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் ஆனார். அவர் கொரோனா தொற்று காலத்தில் சமூக வலைத்தளத்தில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பது குறித்து வீடியோக்கள் வெளியிட்டார். இதையடுத்து நாங்கள் அவரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம்.
அப்போது அவர் தங்கத்தில் முதலீடு செய்தால் 28 மாதத்தில் ரூ.24 லட்சம் கிடைக்கும் என்றும், இதில் குறைந்தபட்சம் 10 கிராம் தங்கம் வாங்க வேண்டும் அல்லது தங்கம் வாங்க முடியாதவர்கள் ரூ.8 ஆயிரம் செலுத்தி, மற்றவர்களை இந்த திட்டத்தில் இணைய வைத்தால் அதிக லாபம் கிடைக்கும்.
மேலும் இதனை 7 கட்டங்களாக பிரித்து ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு லாபம் என்றும், 7-வது கட்டத்திற்கு செல்லும் போது ரூ.8 ஆயிரம் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.1½ லட்சம் வரை பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
நடவடிக்கை
மேலும் இந்த திட்டத்தில் தொடர விருப்பம் இல்லையென்றால் உடனடியாக கட்டிய தொகை திருப்பி தரப்படும் என்றார். இதனை நாங்கள் அவரிடம் ரூ.8 ஆயிரம் பணம் செலுத்தினோம். மேலும் எங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகப்படுத்தினோம். ஒரு சிலருக்கு மட்டுமே அவர் கூறியப்படி லாப தொகை கிடைத்தது. ஆனால் எங்களை போன்ற பலருக்கு அவர் கூறியப்படி லாபத்தொகை கிடைக்கவில்லை. மேலும் கட்டிய பணத்தையும் திருப்பி தரவில்லை. எங்களை போன்று பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.