ஆசைகாட்டி பணம் பறிக்கும் ஆன்லைன் முதலீட்டு செயலிகள்
அதிக வருமானம் கிடைக்கும் என ஆசை காட்டி பணம் பறிக்கும் ஆன்லைன் முதலீட்டு செயலிகளால் பாதிக்கப்பட்டவர்களில் புகார்கள் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்து வருகின்றன.
ஆன்லைன் முதலீட்டு செயலி
தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன. ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையை தூண்ட வேண்டும் என்பது மோசடி நபர்கள் நீண்ட காலமாகவே கடைபிடிக்கும் யுக்தி. அந்த வகையில், ஆன்லைன் மூலம் ஆசைகாட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடன் செயலிகள் வரிசையில் தற்போது ஆன்லைன் முதலீட்டு செயலிகள் பெயரிலும் மோசடிகள் நடந்து வருகின்றன. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து, பணத்தை முதலீடு செய்து மோசடி நபர்கள் விரிக்கும் வலையில் பலரும் சிக்கிக் கொள்கின்றனர். இழந்த பணத்தை திரும்பப் பெற முடியாமல் சைபர் கிரைம் போலீசாரை தேடி வந்து புகார் கொடுக்கின்றனர். அந்த வகையில் தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலும் ஆன்லைன் முதலீட்டு செயலிகள் மீதான புகார்கள் குவிந்து வருகின்றன.
50 பேர் புகார்
தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் இதுபோன்ற மோசடியால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆன்லைன் மோசடியில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர். படித்தவர்கள் தான் இதுபோன்ற மோசடியில் அதிக பணத்தை இழப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே அதிக வருமானம் பெறலாம் என்று செல்போனுக்கு வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஆகியவற்றை நம்பி, அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் ஆன்லைன் செயலிக்கான இணைப்பை (லிங்க்) அனுப்பி வைக்கின்றனர்.
ஏமாற வேண்டாம்
அதை பதிவிறக்கம் செய்து முதலீடு செய்தால் சில இலக்குகளை செய்யச் சொல்வார்கள். அவர்கள் கொடுத்த இலக்குகளை சரியான நேரத்தில் செய்து விட்டால், செலுத்திய பணத்தை விட அதிக பணம் திருப்பிக் கொடுக்கின்றனர். முதலில் சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து, ஓரிரு முறை பணத்தை திருப்பிக் கொடுப்பார்கள். அதிக பணம் கிடைக்கிறது என்ற ஆசையில், கூடுதல் தொகையை முதலீடு செய்கின்றனர். அதன்பிறகு செலுத்திய பணம் திரும்ப கிடைப்பது இல்லை.
சிறிய மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல், சிறிய தொகையை கொடுத்து ஆசையை தூண்டிவிட்டு, பெரிய தொகையை பறிக்கின்றனர். புகார் கொடுத்தவர்கள், இந்த செயலி மூலம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளனர். அவர்களில் சிலர் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் முதலீடு செய்துள்ளனர். இதுபோன்ற மோசடி செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.