காரமடை அருகே பயங்கரம்:நிதி நிறுவன அதிபர் வெட்டிக் கொலை-கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் தம்பி வெறிச்செயல்
காரமடை அருகே கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி தம்பி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
காரமடை
காரமடை அருகே கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காததால் நிதி நிறுவன அதிபரை அரிவாளால் வெட்டி தம்பி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நிதி நிறுவன அதிபர்
கோவை மாவட்டம் காரமடை அருகே திம்பம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (வயது 67). நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி கமலா. இவரது மகன் கார்த்தி. ஐ.டி. நிறுவன ஊழியர். மகள் சவிதா திருமணமாகி அதே பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். ரங்கராஜனுக்கும் அவரது மனைவி கமலாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனால் ரங்கராஜன் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். விவாகரத்துக்குபின் கமலா மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
ரங்கராஜனின் சகோதரர் குபேந்திரன் (57). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவியான ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த சிவரஞ்சினியுடன் வாழ்த்து வந்தார். இந்தநிலையில் சிவரஞ்சினி கடந்த 2014-ம் ஆண்டு இறந்தார். இதையடுத்து அவர் சிறுமுகையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
கள்ளக்காதல்
அப்போது சிறுமுகையில் திருமணமான பெண்ணுடன் குபேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலானது. அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.
திடீரென குபேந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவர் தனது அண்ணனான ரங்கராஜன் வீட்டிற்கு வந்து அங்கு கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்தார். இதனை தொடர்ந்து குபேந்திரன், ரங்கராஜனிடம் தான் பழகி வரும் அந்த பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். இதை ரங்கராஜன் கண்டித்து உள்ளார்.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் மாலை குபேரந்திரனுடன் பழகி வந்த அந்தப் பெண் ரங்கராஜன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரங்கராஜன் அந்த பெண்ணிடம் பணம் தரமுடியாது எனவும், என் தம்பியை கல்யாணம் செய்யக்கூடாது எனவும் கூறியதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக குபேந்திரனுக்கும், ரங்கராஜனுக்கும் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று குபேந்திரன் திட்டம் தீட்டினார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் உள்ள கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கராஜனை குபேந்திரன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ரங்கராஜன் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின் குபேந்திரன் அவரது தாய் மாமா மகளான சிறுமுகையிலுள்ள உறவினருக்கு தொலைபேசியில் ரங்கராஜனை வெட்டி கொன்றதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இதுகுறித்த தகவல் காரமடை போலீசாருக்கு கொடுக்கப்பட்டது. அதன்போில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, சுல்தான் இப்ராகிம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரங்கராஜனின் உடலை பார்வையிட்டனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் நிதி நிறுவன அதிபரை அவரின் தம்பியான குபேந்திரன் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ரங்கராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரங்கராஜனின் உடலை பார்த்து அவரின் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
அண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிஓடிய தம்பியை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலிக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த அண்ணனை தம்பி வெட்டிக் கொன்ற இந்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.