துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பல்லடம்
பல்லடம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நகராட்சி
பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 56ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 36 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 181 துப்புரவு பணியாளர்களும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த 3 வருடங்களாக பல்லடம் நகராட்சியில் துப்புரவு பணிக்கு ஒப்பந்தம் எடுத்திருந்த ஒப்பந்ததாரரின் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூய்மைப் பணிக்கு சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. அந்த நிறுவனம் துப்புரவு பணிக்கு 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நகராட்சி ஆணையாளர் வினாயகம், தலைவர் கவிதாமணி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உறுதி
அப்போது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு நகராட்சி நிர்வாகம் பணி வழங்கும். யாரையும் பணிநீக்கம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்ததை எடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் பல்லடம் நகராட்சியில் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தால் பல்லடம் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் முடங்கின. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில் கொரோனா காலங்களில் கூட உயிரை பணயம் வைத்து குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தோம், தற்போது திடீரென ஆட்குறைப்பு என்ற பெயரில் எங்களை வேலைக்கு வர வேண்டாம் என சொன்னால் எங்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.
--