நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சம்பளம் குறைவாக கொடுத்ததால் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பல்லடம்
சம்பளம் குறைவாக கொடுத்ததால் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
தூய்மை பணியாளர்கள்
பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் 56 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 181 பேரும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குகிறார்கள். இவர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் குறைவாக வழங்கியதால் வேலை நிறுத்தம் செய்தனர். இதையடுத்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து கலெக்டர் தலைமையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குனர், தொழிலாளர் நலத்துறை அலுவலர், நகராட்சி ஆணையாளர்கள், தூய்மை பணி திட்ட ஒப்பந்ததாரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் போக தினசரி ரூ.442 வழங்கப்படும் என பேசி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.
போராட்டம்
இந்த நிலையில் சென்ற மாத சம்பளத்தில் ரூ.20 பிடித்தம் செய்யப்பட்டு ரூ.422 மட்டும் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று காலை பல்லடம் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் செய்தனர். இதையடுத்து பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி அவர்களது கோரிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பல்லடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகசாமி, உள்ளிட்டோர் நகராட்சி ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் நாளை (திங்கட்கிழமை) பிடித்தம் செய்யப்பட்ட ரூ.20 அனைவருக்கும் வழங்கப்படும் என்றும், அடுத்த மாதத்தில் இருந்து ஒப்பந்தப்படி ரூ.442 சம்பளம் வழங்கப்படும் என்றும் ஆணையாளர் உறுதியளித்ததை தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து காலை 11 மணிக்கு தூய்மை பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் பல்லடம் நகரப் பகுதிகளில் தூய்மை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
--------------
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்.