நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை -கவர்னர் பேச்சு


நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை -கவர்னர் பேச்சு
x

இந்தியாவின் இதயம் போன்ற நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

சென்னை,

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்பட்டதை கொண்டாடும் வகையில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

இதில் கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, 94 வயது இயற்கை விவசாயி லட்சுமி அம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாகவும், அதில் நிறுவப்பட்ட செங்கோல் தொடர்பாகவும் சட்டக்கல்லூரி மாணவிகள் மனுஸ்ரீ மற்றும் பாரதி ஆகியோர் தமிழ், ஆங்கிலத்தில் பேசினர்.

அதனைத்தொடர்ந்து கலாசேத்ரா அறக்கட்டளை மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வும், அடையாறு பாலசுப்பிரமணியம் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சியும், ஸ்ரீ ஞான முத்ரா கலைஞர்கள் சார்பில் பரதநாட்டிய நிகழ்வும் அரங்கேற்றப்பட்டன. கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும், நாடாளுமன்றம் மற்றும் அதில் செங்கோல் நிறுவப்பட்டதை பற்றியும் பேசிய மாணவிகளையும் கவர்னர் பாராட்டி கவுரவப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

கலாசார புரட்சி

இன்றைய இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க நாள். வரலாற்று சிறப்புமிக்க, கலாசார புரட்சி நடந்தேறியிருக்கிறது. தமிழ்நாட்டின் அடையாளமான செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதற்காக தமிழக மக்கள் உள்பட நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியாவுக்கு சுதந்திரத்துடன் அதிகாரம் கிடைத்ததற்கான, அதிகாரப்பகிர்வை நினைவுகூரும் வகையில் செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர்கள் இந்தியா மீதான தங்களின் உரிமையை இழந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தது.

ஆனால், அன்றைய தினம் மவுண்ட்பேட்டன் பிரபு, ஆன்மிகம் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்கு, அதிகாரத்தை முறைப்படி பகிர்ந்தளிக்க விரும்பி, ஆதீனத்திடம் இருந்து கேட்டுப்பெற்றதே செங்கோல்.

செங்கோல்

இந்தியா முடியரசில் இருந்து, இறையாண்மை மிக்க குடியரசாக மாறியதை பறைசாற்றுவதே செங்கோல் வழங்கிய நிகழ்வு ஆகும். மிகப்பழமையானதும், தொன்மைமிக்கதுமான நமது சமுதாயம், ஆங்கிலேயர்கள் உள்பட பிற சமுதாயங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச்சென்ற பின், நாம் நமக்குள்ளேயே அடித்துக்கொண்டோம். மதங்கள், மொழிகள், தண்ணீர், மின்சாரம் போன்றவற்றுக்காக நாம் நமக்குள்ளேயே அடித்துக்கொண்டோம். விளைவு, சமுதாயம் பிளவுபட்டது.

தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை

நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய செங்கோல், எங்கோ ஓர் அருங்காட்சியகத்தில் கொண்டு வைக்கப்பட்டது. இன்று, அந்த செங்கோல், மீண்டும் முறைப்படி, எங்கு இருக்க வேண்டுமோ? அங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நாள், தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பெருமையான நாள்.

இந்தியாவின் இதயம்தான் நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் உருவமான நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதில், ராஜராஜ சோழன் என்ன செய்தார் என்று உலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளது. இது இன்றுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story