கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்பட்டியல் இனத்தவர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியல் இனத்தவர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறியுள்ளார்.
கடனுதவியுடன் மானியம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோர்களுக்கு நேரடி வேளாண்மை தவிர்த்து உற்பத்தி சேவை மற்றும் வணிகம் சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தல், ஆயத்த ஆடைகள் உற்பத்தி, அரிசி ஆலை, கட்டுமானப் பொருட்கள், வணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லரை விற்பனை, அழகுநிலையம், உடற்பயிற்சிக்கூடம், வாடகை கார், ஆட்டோ, லாரி, வேன், பேருந்து, ஆம்புலன்ஸ், மற்றும் குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் வாங்கி பயன்பெறலாம். இதுதவிர இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் மானிய உதவி வழங்கப்படும். மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மானிய உச்சவரம்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும். கடன் திரும்பச் செலுத்தும் காலம் வரை 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த எந்தத் தனிநபர் மற்றும் முழு உரிமை கொண்ட தனியுரிமையாளர், பங்குதாரர் கூட்டாண்மை, பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ்பயன்பெறலாம்.
திறன் மேம்பாட்டு பயிற்சி
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி தேவையில்லை. மொத்ததிட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன் முனைமானியம் வழங்கப்படும். எனவே பயனாளர்களுக்கு தமது பங்காக நிதிசெலுத்த வேண்டிய தேவை இருக்காது. தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட திட்டம் தொடர்பான சிறப்புப்பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டுப்பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்டஅறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs/ என்ற இணையதளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும். தகுதியும் ஆர்வமும் கொண்ட பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், எண்.95/22 ராஜாநகர், கள்ளக்குறிச்சி (606202) அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது (9443077083, 7097737889, 8248878219) ஆகிய எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
விழிப்புணர்வு கூட்டம்
மேலும் இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த தொழில்முனைவோர் இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.