புகார்தாரரிடம் காணொலி காட்சி மூலம் குறைகேட்கும் திட்டம்
நேரில் வரமுடியாத புகார்தாரரிடம், காணொலி காட்சி மூலம் குறை கேட்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
நேரில் வரமுடியாத புகார்தாரரிடம், காணொலி காட்சி மூலம் குறை கேட்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
குறை கேட்பு
முதியோர்கள், பெண்கள், மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார்களை அளிக்க முடியாதவர்களிடம் காணொலி காட்சி மூலம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துஇருந்தார்.
அதன்படி காணொலி காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகள் கேட்பதற்கான ஏற்பாடுகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.
இ.மெயில் முகவரி
அப்போது இடப்பிரச்சினை தொடர்பாக பீளமேட்டை சேர்ந்தவர் காணொலி காட்சி மூலம் புகார் அளித்தார். அவரிடம் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
இந்த திட்டம் குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தும் நடைமுறை திங்கட்கிழமை தோறும் பகல் 12 மணிமுதல் பகல் 1 மணிவரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும் குறைபாடுகளை, online grievance. Copcbe@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இணைப்பு கொடுக்கப்படும்
அவ்வாறு புகார் தெரிவிப்பவர்களுக்கு ஆன்லைன் சந்திப்புகளுக்கான இணைப்பு (லிங்க்) இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி அவர்கள் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு புகார் விவரங்களை என்னிடம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்வதன் மூலம் நேரில் வருவதை தவிர்க்கலாம். இதுதவிர நேரிலும் போலீஸ் கமிஷனரிடம் குறைகள் தீர்க்க கோரி மனு கொடுக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.