கல்வி, மருத்துவத்துக்காக செலவு செய்வது இலவசமாகாது - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
கொளத்தூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.தொடர்ந்து பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ;
தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறேன்.ஆனால் என்னுடைய சொந்த தொகுதிக்கு வரும்போது தான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது. மாணவர்கள் அனைவரும் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டும்.
அனைவருக்கும் எளிய முறையில் கல்வி கிடைக்க செய்வதே இந்த அரசின் நோக்கம். கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசமாகாது.இல்லம் தேடி கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிகளில் காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்துமே மக்கள் நலத் திட்டங்களாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இலவசங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் வகையில் இவை செயல்படுத்தப்படுகின்றன.
இலவசம் கூடாது என அறிவுரை கூற சிலர் புதிதாக வந்திருக்கிறார்கள். அது பற்றி நமக்கு கவலை இல்லை. இது பற்றி இதற்கு மேல் பேசினால் அது அரசியல் ஆகிவிடும், இங்கே அதை பேச விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.