வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாத உதவித்தொகை
படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துள்ளவர்கள் அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்துள்ளவர்கள் அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசின் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.
தகுதியானவர்கள்
தொடர்ந்து, பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம். மேலும், இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவா்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்-2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
பயனடையலாம்
இத்திட்டத்தின் கீழ் இதுவரை உதவித்தொகை பெறாத தகுதியானவர்கள் விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அலுவலகத்தில் வேலைநாளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். ஏற்கனவே, உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுய உறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம். சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.