மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை


மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
x

நாமக்கல்லில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

கலந்துரையாடல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 2022-23-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உயர்கல்வி படிப்புகள் தொடர வேண்டும் என்கிற நோக்கில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குவதற்காக நான் முதல்வன் "உயர்வுக்கு படி" என்ற முகாமானது கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இம்முகாமில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிலையில் நான் முதல்வன் - "உயர்வுக்கு படி" முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் 5 பேர் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 6 மாணவிகள் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியிலும் உயர்கல்வி பயில சேர்ந்து உள்ளனர்.

இவர்களுடன் கலெக்டர் உமா கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவர், தங்களது உயர்கல்வியினை சிறப்பாக பயின்று சமூகத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மாணவ, மாணவிகள் எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அந்த துறையில் சிறப்பாக கவனம் செலுத்தி கல்வி பயில வேண்டும் என்றார்.

கல்வி உதவித்தொகை

இந்த நிகழ்ச்சியில் முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தொழிற்கல்வி பயின்று வரும் தீபிகாவுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, போதமலை கீழுர் மலை கிராமத்தில் இருந்து மருத்துவ படிப்பு பயின்று டாக்டரான ரமணி என்பவரை பாராட்டி, புத்தகங்களை வழங்கினார். மேலும் தலைமலை வனப்பகுதியில் விதை பந்து வீசிய மலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி, புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார். மேலும், முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையாக 6 பேருக்கு ரூ.13 ஆயிரம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், நாமக்கல் தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story