தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
கடலூர் மாவட்டத்தில் தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
பள்ளி மாணவர்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தேர்ந் தெடுக்கப்படும் மாணவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை ரூ.6 ஆயிரம் 1 ஆண்டுக்கு உதவித்தொகையாக வழங்குகிறது. இந்த உதவித்தொகையை பெற தகுதியாக 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மாணவராக இருக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள தபால் தலை சேகரிக்கும் சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது மாணவர் தனது சொந்த தபால் தலை வைப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். மாணவர் உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்படும் போது, அவர் சமீபத்திய இறுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான கிரேடு, கிரேடு புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 சதவீதம் தளர்வு உண்டு.
வினாடி-வினா
உதவித்தொகை பெறுவதற்காக தேர்வு 2 நிலைகளை கொண்டது. நிலை ஒன்றில் தபால் தலை தொடர்பான எழுத்து வினாடி-வினா 5.10.2023 அன்று நடத்தப்படும். நிலை 2-ல் வினாடி- வினாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், இறுதித் தேர்வுக்கான தபால் தலை திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். வினாடி-வினா தேர்வு 50 கேள்விகளை கொண்டிருக்கும் (தெரிவு விடை-வினா). அவை நடப்பு விவகாரங்கள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம், புவியியல் மற்றும் தபால் தலை (உள்ளூர் மற்றும் தேசிய) தொடர்புடையதாக இருக்கும்.
தபால்தலை திட்டம் 4 முதல் 5 பக்கங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. இதில் மாணவர்கள் 16 தபால் தலைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. 500 வார்த்தைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. வினாடி-வினா முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திட்டம் தொடர்புடைய விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
விண்ணப்பம்
இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tamilnadupost.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவங்கள் கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு அடுத்த மாதம் 8-ந் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) முன்னர் வந்து சேர வேண்டும்.
தபால் உறையின் மேல்"தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா 2023-24" என்று தெளிவாக எழுத வேண்டும். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் 8 மற்றும் 9 நிரப்பும் போது, தெரிவு பொருந்தவில்லை எனில் என்/ஏ என குறிப்பிட வேண்டும்.
ஆகவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை கடலூர் கோட்ட தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.