விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை திட்டம்
விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை திட்டத்துக்காக 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற வருகிற 15-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
உதவித்தொகை திட்டம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம் 3 வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்), பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான பொதுவான தகுதி மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
தகுதிகள்
ஒவ்வொரு பிரிவிற்குமான தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களை திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும்.
திட்டத்தில் பயன் பெறுபவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள், உள்ளிட்டவற்றை இணைய வழியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்யேக பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நிறுத்தப்படும்
உதவித்தொகை காலத்தில் 3 மாதங்கள் வரை விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், 6 மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், 2 ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகையாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரையிலும், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.2 லட்சம் வரையிலும் உதவித்தொகை வழங்கப்படும்.
இணைய வழியில்..
இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய தளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை தற்போது முதல் வருகிற 15-ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே தபால் வழியில் அல்லது நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களை தவிர பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் என்ற தகவல் மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.