1,961 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை


1,961 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் கல்வி உதவித்தொகை
x

வேலூர் மாவட்டத்தில், புதுமைப்பெண் திட்டத்தில் 2-வது கட்டமாக 1,961 மாணவிகளுக்கு உதவித்தொகையை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.

வேலூர்

புதுமைப்பெண் திட்டம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் படித்துவரும் மாணவிகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற புதுமைப் பெண் 2-ம் கட்ட திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி அந்தந்த மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

காட்பாடி அக்சீலியம் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1,961 மாணவிகள்

இந்த திட்டத்தின்படி வேலூர் மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் என 56 கல்லூரிகளில் படிக்கும் 1,961 மாணவிகள் பயனடைய உள்ளனர்.

அவர்களில் 800 பேருக்கு உதவித்தொகையை விழா மேடையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். இதில் காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், கவுன்சிலர்கள் கே.அன்பு, விமலா, சிவசங்கரி, சித்ரா லோகநாதன், சீனிவாசன், சரவணன் உள்பட அரசு அதிகாரிகள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story