சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
கல்வி உதவித் தொகை
தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளத்தில் (national scholarships portal-NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம்
எனவே தகுதியான மாணவ- மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு நாளை வரை, மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டம் தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http.www.minorityaffairs.gov.in/என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.