நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகம் முழுவதும் நேற்று தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேண்டு வாத்தியங்கள் இசைத்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உற்சாக வரவேற்பு
தமிழகம் முழுவதும் நேற்று தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு நூதன வரவேற்பு அளிக்க தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள் அனைவரும் பள்ளி வாசலில் இருந்து வகுப்பறை வரைக்கும் பேண்டு வாத்தியக்குழுவினரின் இசையுடன் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஏற்கனவே பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களும் சேர்ந்து புதிய மாணவர்களை கைதட்டி வரவேற்றனர்.
பெற்றோர்கள் பூரிப்பு
இதைத்தொடர்ந்து புதிய மாணவர்களுக்கு வகுப்பறைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் அந்த மாணவ, மாணவிகளை கொண்டு வகுப்பறைகள் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கு வந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து வகுப்புகள் நடந்தன.
நேற்று பள்ளியில் முக்கிய பிரமுகர்களை போன்று பேண்டு வாத்தியங்களுடன் தங்கள் குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டதையும், வகுப்பறைகள் மாணவர்களை கொண்டு திறக்கப்பட்டதையும் பார்த்த பெற்றோர்கள் மிகவும் பூரித்து போயினர்.
இதேபோல் நூதனமான வரவேற்பால் மாணவ-மாணவிகளும் வித்தியாசமான அனுபவத்தை பெற்றனர்.