பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு


பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும்; கலெக்டர் உத்தரவு
x

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பள்ளி கட்டிட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டு பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 72 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் 402 பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் சமையற் கூடங்கள் சீரமைக்கும் பணிகளும், ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.3 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் 190 பள்ளி கட்டிடங்கள் புனரமைக்கும் பணிகள் மற்றும் கனிமவள திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 3 பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்கம் என மொத்தம் ரூ.9 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பீட்டில் 595 பள்ளி கட்டிடங்கள் பழுது நீக்க பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கலெக்டர் முருகேஷ் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழுது நீக்கம் செய்யப்பட உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களை 2 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கையினை உடனடியாக வழங்க வேண்டும்.

நாளைக்குள்...

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அனைத்து பள்ளி கட்டிடங்கள், கழிவறைகள், சமையற் கூட பழுது நீக்க பணிகளை நாளைக்குள் (சனிக்கிழமை) முடிக்க வேண்டும்.

மேலும் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்கள், இதர கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திடவும், அக்கருத்துருவினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதவி இயக்குனர் நிலையிலான அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story