பள்ளி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து


பள்ளி பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. மாணவர்களுடன் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் நேற்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. 6 மணி அளவில் புதூர் மேம்பாலம் மீது வரும்போது, எதிரில் வந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே பஸ்சை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் வெள்ளங்கிரி என்பவர் தப்பி ஓடிவிட்டார்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மேம்பாலத்தின் இரு பகுதிகளிலும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story