ரூ.60 லட்சத்தில் பள்ளி வகுப்பறை, ரேஷன் கடை
ஜம்மணபுதூர் ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் பள்ளி வகுப்பறை, ரேஷன் கடை திறக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜம்மணபுதூர் ஊராட்சியில் பள்ளிகளுக்கு புதிய மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.30 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடம், ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஜம்மணபுதூர் பஸ் நிறுத்தம் முதல் புட்டன் வட்டம் வரை ரூ.6 லட்சத்து 18 ஆயிரத்தில் புதியதார் சாலை, பூங்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா மற்றும் தார்சாலை பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றம் தலைவர் ஞானசெல்வி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாநிதி, சங்கர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடையை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் புதிய தார் சாலைக்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.