பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வேலூர் ஆர்.என்.பாளையத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி
வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சுத்தொழிலாளி. இவருடைய மனைவி தேவகி, கொணவட்டத்தில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு ரம்யா (வயது 14) என்ற மகளும், 2 மகன்கள் இருந்தனர். ரம்யா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வெங்கடேசன் இன்று காலை வேலை விஷயமாக வெளியே சென்றார்.
சிறிதுநேரத்தில் தேவகியும் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.
வெங்கடேசன் நேற்று வீட்டிற்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்திருந்தாகவும், அந்த சிலிண்டர் வரும் என்பதால் ரம்யாவை வீட்டில் இருந்து அதனை வாங்கி வைக்கும்படி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் ரம்யா நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்பா உடனடியாக வாங்க...
இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் ரம்யா செல்போன் மூலம் வெங்கடேசனை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அப்போது அவர் பதற்றத்துடன் அப்பா உடனடியாக வீட்டிற்கு வாங்க... உடனடியாக வாங்க... என்று கூறியநிலையில் செல்போன் இணைப்பு துண்டானது.
இதையடுத்து வெங்கடேசன் உடனே அந்த எண்ணை தொடர்பு கொண்டார். செல்போன் ரிங் தொடர்ந்து அடித்தும் அதனை ரம்யா எடுத்து பேசவில்லை.
அதனால் அதிர்ச்சிக்கு உள்ளான அவர் அந்த பகுதியில் வசிக்கும் உறவினரை செல்போனை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி உடனடியாக வீட்டிற்கு சென்று ரம்யாவை பார்க்கும்படி கூறினார்.
அதன்பேரில் உறவினர் வேகமாக வீட்டிற்கு சென்று பார்த்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
அங்கு அறை ஒன்றில் ரம்யா மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தாள். இதையடுத்து உறவினர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை தூக்கில் இருந்து கீழே இறக்கி சிகிச்சைக்காக வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ரம்யா உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் வழக்குப்பதிந்து பள்ளி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.