பஸ் கண்டக்டரை கண்டித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல்


பஸ் கண்டக்டரை கண்டித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல்
x

கந்தர்வகோட்டை அருகே பஸ் கண்டக்டரை கண்டித்து பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே குளத்தூர் நாயக்கர்பட்டி உள்ளது. இங்குள்ள மாணவிகள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மருங்குளம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்ததும் மாணவிகள் தஞ்சாவூரிலிருந்து கறம்பக்குடி வழியாக பொன்னமராவதி செல்லும் பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பஸ்சில் பயணம் செய்த மாணவிகளை கண்டக்டர் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவிகள் குளத்தூர் நாயக்கர்பட்டியில் பஸ் நின்றதும் பஸ்சின் முன்பாக அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்டக்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கோரிக்கை

இதுகுறித்து மாணவிகள், பெற்றோர்கள் கூறுகையில், குளத்தூர் நாயக்கர்பட்டி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் எல்லை பகுதியாக உள்ளது. இந்த மார்க்கத்தில் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே பள்ளி நேரத்திலும், பள்ளி முடியும் நேரத்திலும் போதிய பஸ் வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story