அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
மடத்துக்குளம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார் தெரிவித்து அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் அருகே தலைமை ஆசிரியை மீது புகார் தெரிவித்து அரசுப்பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
மடத்துக்குளத்தை அடுத்த துங்காவி ஊராட்சி உடையார்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கழுகரை பகுதியைச் சேர்ந்த கலையரசி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட பெற்றோர் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்த பெற்றோர், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:-
'தலைமை ஆசிரியை கலையரசி பள்ளிக் குழந்தைகளை மிகவும் மோசமாக நடத்துகிறார். நீங்களெல்லாம் சிறைக்கைதிகள், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று குழந்தைகளை மிரட்டுவதுடன் அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நூதன தண்டனை
குழந்தைகளை தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ அனுமதிக்காமல் நூதன முறையில் தண்டனை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை நீண்ட நேரம் கழிவறை செல்ல அனுமதிக்காததால் வயிற்று வலி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையளித்துள்ளனர். மேலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, ஆபத்தான முறையில் குடிநீர்த் தொட்டி மீது ஏறி தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் கேட்டால் அவர்களிடமும் மரியாதையில்லாமல் பேசுகிறார். இந்த தலைமை ஆசிரியரின் தவறான அணுகுமுறையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் 150 மாணவர்கள் படித்த இந்த பள்ளியில் தற்போது வெறும் 60 மாணவர்களே படிக்கின்றனர். மேலும் இந்த தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் நிழல் கொடுத்த வேப்ப மரத்தை அனுமதியில்லாமல் வெட்டியதால் மாணவர்கள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர் இதற்கு முன் வேலை பார்த்த கணேசபுரம், சின்னப்பன்புதூர் பகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளால் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் இதே பள்ளியில் நீடித்தால் எங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்'.
இவ்வாறு பெற்றோர் கூறினர்.
இதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் அருள் முருகன் பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் புகாரின் பேரில் குழந்தை நல அலுவலர்களும் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.