நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பு பயிற்சி
வால்பாறையில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு ஒருங்கிணைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம்
வால்பாறை நகராட்சி கவுன்சிலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி மேலாண்மை குழுவை ஒருங்கிணைப்பது குறித்து வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்களுக்கு சென்று பள்ளியின் அடிப்படை வசதிகள், கழிப்பிடம், குடிதண்ணீர், சுற்றுச்சுவர் பாதுகாப்பு, பள்ளி வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய தேவைகள் குறித்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும்.
பள்ளி வளர்ச்சியில் அக்கறை
இதுதவிர பள்ளிக்கு வரக்கூடிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பதை கண்டறிவது, மேலும் அந்தந்த எஸ்டேட் பகுதியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடுவீடாக சென்று பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கூடத்திற்கு வரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு தவறாமல் சென்று பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து பள்ளி வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும் என்று கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்போது கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முன்கூட்டியே தெரிவிக்க அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த பயிற்சி முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் ரம்யா, சபிதா பயிற்சியளித்தனர்.