நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு தூய்மை பணிகள் தீவிரம்
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது
பள்ளிகள் திறப்பு
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் சற்று தாமதமாக தொடங்கப்பட்டன. இருப்பினும் தேர்வுகள் முடிக்கப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை முடிந்து மீண்டும் நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் தொடங்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகம், சீருடை, நோட்டுகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
முன்னேற்பாடு பணி
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் நடுநிலைப்பள்ளியில் நகராட்சி பணியாளர்கள் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இவர்கள் வகுப்பறைகள், பள்ளி வளாகம் போன்ற பகுதிகளில் தூய்மை பணி மேற்கொண்டனர். இதேபோல் குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்தனர். மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆசிரியர்களால் படம் தயாரிப்பு பணி அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.