வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பள்ளி இடம்
கண்ணமங்கலத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பள்ளி இடத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணமங்கலம்
கண்ணமங்கலத்தில் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பள்ளி இடத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய பள்ளி
கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியை சாந்தி, போதிய கட்டிட வசதி இல்லை என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வார்டு சபை கூட்டத்தில் புகார் செய்தார். இதனால் இப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டது.
இதனால் மாணவ-மாணவிகளுக்கு பெருமாள் கோவிலில் வகுப்புகளை நடத்தி வந்தனர். தற்போது பழுதடைந்த கட்டிடம் சீரமைத்து புதிய தகர ஷீட்டுகள் அமைத்துள்ளனர்.
வாகனங்கள் நிறுத்துமிடம்
இந்த நிலையில் சீரமைத்த கட்டிடத்தில் வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டாமல் உள்ளனர்.
இதனால் காலியாக உள்ள பள்ளி வளாகத்தில் அப்பகுதி மக்கள் சிலர் தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பள்ளி வளாகம் வாகன நிறுத்துமிடமாகி மாறி உள்ளது.
ஏற்கனவே இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் பார்வையிட வந்த சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ,25 லட்சம் ஒதுக்கீடு செய்து தருவேன் என கூறினார்.
ஆனால் இதுவரை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை இல்லை என்பதால், இடிக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்துமிடம், சிலர் காலை நேரங்களில் நடை பயிற்சியும் செய்து வருகின்றனர்.
இதனால் ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.