ஆக்கிரமிப்பால் ஒத்தையடி பாதையாக மாறிய பள்ளிக்கூட சாலை


ஆக்கிரமிப்பால் ஒத்தையடி பாதையாக மாறிய பள்ளிக்கூட சாலை
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் ஆக்கிரமிப்பால் ஒத்தையடி பாதையாக பள்ளிக்கூட சாலை மாறியுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகத்தில் சேலம் மெயின் ரோட்டில் இருந்து தியாகதுருகம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் சென்று வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில், சீனிவாசபெருமாள் கோவிலுக்கு மட்டுமின்றி உதயமாம்பட்டு, அந்தியூர், குன்னியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதன் காரணமாக இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். மேலும் விளம்பர போர்டுகளையும் வைத்துள்ளனர்.

இதனால் அந்த கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வாடிக்கையாளர்கள், தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடியாமல், சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

ஒத்தையடி பாதை

இதனால் சாலை தற்போது மிகவும் சுருங்கி ஒத்தையடி பாதை போன்று உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள், மாணவ-மாணவிகள் உள்பட அனைவரும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சில நேரங்களில் ஆட்டோ கூடஅந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பள்ளி நேரங்களில் அங்கு கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. சாலையோரத்தை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருவதால், மாணவ-மாணவிகள் நடுரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் மாணவ-மாணவிகள் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்திலேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.

நடவடிக்கை

இதை தவிர்க்க சாலையை சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேற்கொண்டு அங்கு சாலையை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் விபத்துகள் குறையும். எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story