காதல் விவகாரத்தில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து
கோவையில் காதல் விவகாரத்தில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து விழுந்தது.
சிங்காநல்லூர்
கோவை ஒண்டிப்புதூர் அருகே சூர்யா நகரை சேர்ந்த 16 வயது மாணவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியை காதலிப்பதாக தெரிகிறது. இதை அறிந்த அந்த மாணவியின் அண்ணன் அந்த மாணவரை அழைத்து கண்டித்து உள்ளார். ஆனாலும் அந்த மாணவன், தனது காதலை கைவிடவில்லை.
இது தொடர்பாக பேசிய போது அந்த மாணவியின் அண்ணனுக் கும், அந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோத மாக மாறியது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு கோவில் திருவிழா நடந்தது. அதில் அந்த மாணவன் தனது நண்பருடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த அந்த மாணவியின் அண்ணன் வந்தார். அங்கு அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மாணவியின் அண்ணன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவனை குத்திவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயம் அடைந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.