பள்ளிக்கு சென்று வரும் போது கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை; மாணவ-மாணவிகள் கோரிக்கை
பள்ளிக்கு சென்று வரும்போல் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி அருகே டொம்புச்சேரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் சிலர் தங்களின் பெற்றோருடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். அவர்களுடன் தமிழ்ப்புலிகள் கட்சி நிர்வாகிகள் சிலரும் வந்தனர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
பின்னர் மனு கொடுத்த மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கூறுகையில், "டொம்புச்சேரியில் இருந்து மாணவ-மாணவிகள் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் போது, மாணவர்கள், இளைஞர்கள் சிலர் கேலி செய்கின்றனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறினர்.
இதேபோல், ஜெய்பீம் புரட்சி புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், "தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக, அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த தகுதியான நபரை நியமனம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட பொறுப்பாளர் முருகேசன் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 246 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 19 வழக்குகளில் பாதிக்கப்பட்ட 37 பேருக்கு நிவாரண தொகை நிலுவையில் உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நிலுவையில் உள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.