மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் பள்ளி மாணவர்கள்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாணாபுரம்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகமாக பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மோட்டார்சைக்கிளில் மாணவர்கள்
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில் என்பதால் இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு திருவண்ணாமலை, தண்டராம்பட்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
சுற்று வட்டார பகுதியில் மையமாக இருக்கும் இப்பகுதிகளில் பள்ளி செல்லும் நேரங்களில் போதுமான பஸ் வசதிகள் இல்லை. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
அடிக்கடி விபத்துகள்
மேலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் தினமும் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வரும் மாணவர்கள் அதிவேகமாகவும், 2,3 மாணவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் செல்வதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் படுகாயம் அடைந்து கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு ஆலோசனைகளை வழங்க வேண்டும். பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதனை பெரும்பாலான மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பின்பற்றுவதில்லை.
வாகன தணிக்கை
இதனால் நாளுக்கு நாள் அதிகளவில் விபத்து ஏற்படுவது மட்டுமல்லாமல் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாக போலீசார் அவ்வப்போது மட்டும் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபடுவது இல்லை. இதனை பயன்படுத்திய மாணவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக செல்கின்றனர்.
மேலும் மோட்டார் சைக்கிளில் சைலன்சர்களை மாற்றி அமைத்து சத்தத்தை அதிகரிக்கும் வகையில் ஓட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் அதிருப்தி அடைகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், அதி வேகமாக வாகனங்கள் ஓட்டும் சிறுவர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கும் சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.