பொக்லைன் மூலம் குழி தோண்டியதால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி
வழிப்பாதை பிரச்சினை காரணமாக பொக்லைன் மூலம் குழி தோண்டியதால் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புதுப்பேட்டை சந்தைபகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் பக்ரிமடம் எம்.ஜி.ஆர். நகரில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைப்பிரிவு வழியாக சென்று வருகிறது.
கடந்த வாரம் வீட்டுமனை உரிமையாளர்கள் நிலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள் செல்லக்கூடாது என கூறி முள் வேலி கற்களை அமைத்தனர்.
இதையறிந்த பள்ளி நிர்வாகி ரவிவர்மா மற்றும் சிலர் எங்களுக்கு சொந்தமான இடம் என கூறி முள்வேலியை அகற்றினர். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் சிலர் பள்ளி வாகனம் சென்று வந்த பாதையில் பொக்லைன் மூலம் குழி தோண்டினர்.
இதனால் இன்று காலை பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர். மேலும் அங்கு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மலர் (நாட்டறம்பள்ளி), பழனி (வாணியம்பாடி) மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து தற்காலிகமாக மாணவர்கள், பள்ளி வாகனங்கள் சென்று வர நடவடிக்கை மேற்கொண்டனர்.