பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் இயங்கின

நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் நேற்று இயங்கின. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் வழக்கம் போல் நேற்று இயங்கின. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மாணவி சாவு சம்பவம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதால் பள்ளிக்கூடத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதாவது தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்' என்று அறிவித்து இருந்தது.
வழக்கம் போல் இயங்கியது
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அனைத்தும் நேற்று வழக்கம்போல் செயல்பட்டன. 2 பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் காலையில் மாணவ-மாணவிகள் வரவில்லை. கலெக்டர் உத்தரவின் பேரில் மதியத்திற்கு பிறகு அந்த பள்ளிக்கூடங்களும் வழக்கம் போல் செயல்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் 115 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வழக்கம் போல் வந்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
நெல்லை மாநகர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் நிறைந்த பகுதி மற்றும் பதற்றம் ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






