பள்ளிக்கூடங்கள் நாளை திறப்பு; தூய்மை பணிகள் மும்முரம்
நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி அங்கு தூய்மை பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நாளை (திங்கட்கிழமை), 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது.
பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்களின் வளாகங்களில் தூய்மை பணிகளும், வகுப்பறையில் இருக்கைகள் ஏற்பாடு வசதி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கூடங்களில் சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்கள், கழிவறைகள் சீரமைக்கும் பணிகள், சுவர்கள், கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு விலையில்லா பாடப்புத்தகங்களும் தயார் நிலையில் உள்ளன.
நெல்லை மாநகர பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் அனைத்து வகுப்பறைகளும் சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை வண்ணார்பேட்டை, சந்திப்பு மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் சுகாதார அலுவலர் சாகுல் ஹமீது, சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் பள்ளிக்கூடங்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.