நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறப்பு கிருமி நாசினி தெளித்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில்  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறப்பு  கிருமி நாசினி தெளித்து முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு (2021-2022) நேரடி வகுப்புகள் சற்று தாமதமாக தொடங்கிய நிலையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்தது. தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் புதிய கல்வி ஆண்டில் அடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. உள்பட மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்ற உள்ளது.

கலெக்டர்களுக்கு உத்தரவு

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் தான் நேரடி வகுப்புகள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. அந்த வகையில் புதிய கல்வியாண்டில் நேரடி வகுப்பில் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தந்த பள்ளிகள் அதற்கான முன்னேற்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை கண்காணிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் பள்ளியில் நடைபெறுகின்ற பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நேற்று பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பள்ளிக்கூடங்களில் உள்ள கழிப்பறைகள், சமையல் அறைகள், வகுப்பறை கட்டிடம் உள்ளிட்டவை உறுதி தன்மையுடன் இருக்கிறதா? என்பதை உள்ளாட்சி துறை அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி பணியாளர்கள் சுகாதார அலுவலர் இளங்கோ நேரடி மேற்பார்வையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர். இதேபோல் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கல்வி உபகரணங்கள்

மேலும், கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய பாடபுத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் போன்ற கல்வி உபகரணங்களை பள்ளிகள் தொடங்கும் முதல் நாளிலே வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி-தென்காசி

இதேேபால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை திறக்கப்படுகிறது. இதற்காக பள்ளிக்கூடங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடைேய, நேற்று தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு பள்ளி வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது, பள்ளி வாகனங்களின் படிக்கட்டு, வாகனத்தின் இருக்கைகள், அவசரகால வழி, முதலுதவி மருந்துகள், தீயணைப்பு கருவி ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என்றும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். மேலும் பள்ளி பஸ்களின் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்தும் அறிவுரையும் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 1,289 பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதற்காக பள்ளிகளில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.


Next Story