வீடுகளை போல் பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்


வீடுகளை போல் பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Sept 2023 2:15 AM IST (Updated: 10 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளை போல் பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தினார்.

நீலகிரி

ஊட்டி

வீடுகளை போல் பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி அறிவுறுத்தினார்.

சுத்தமாக வைக்க வேண்டும்

நீலகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' நிகழ்ச்சி ஊட்டி அருகே ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரியும், கலெக்டருமான (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் உறுதி செய்யும் வகையில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. நம் வீடுகளை சுத்தமாக வைத்திருப்பது போல, பள்ளிகளை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நம் தேவைக்கேற்ற பொருட்களை மட்டும் வாங்கிக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.

மரக்கன்றுகள் நடவு

நீலகிரி மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக திகழ்கிறது. பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர்கள் ஆகியோர் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் பள்ளி மாணவர்களுக்கு சென்று சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சுகாதாரத்தை கடைபிடிப்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதன் பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, பள்ளி தலைமை ஆசிரியை ஷோபனாவிடம் மரக்கன்றுகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் கற்றல் நிலைக்கு ஏற்ப மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story