வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறப்பு:ஊட்டியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
நீலகிரியில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி
நீலகிரியில் வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளிகள் விடுமுறை
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடந்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 7-ந் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 20-ந் தேதி வரை நடைபெற்றது.
இதில் பிளஸ் -2 மாணவர்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ்- 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இதற்கிடையே தேர்வுகள் முடிந்ததும் வழக்கம் போல மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.
சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்
இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும், 14-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஊட்டியில் பள்ளிகள் திறக்கப்படுவதால், முன்னதாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
700 பள்ளிகள்
நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 700 பள்ளிகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்தநிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கூட வளாகம், வகுப்பறைகள், மைதானம், கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பள்ளி வளாகத்தில் கிடந்த உடைந்த பொருட்கள், கட்டிட இடிபாடுகளை அகற்றி விசால படுத்தப்பட்டு உள்ளது. விளையாட்டு மைதானங்களில் இருந்த சிறு சிறு பள்ளங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வகுப்பறையில் இருந்த ஒட்டடை அடிக்கப்பட்டு மேஜைகள் சரி செய்யப்பட்டுள்ளது. கரும்பலகைகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டு வருவதால் பளிச்சென்று காட்சியளிக்கின்றன.
புத்தகங்கள் தயார்
இந்தப் பணியில் தலைமை ஆசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.
இதேபோல் பள்ளிக்கூடம் திறக்கும் தினத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.