ஆலமரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் திருவிழா
பாப்பாரப்பட்டி:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடை காலத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், வானவில் மன்ற கருத்தாளர்கள் மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் கருத்துகளையும், கணித புதிர்களையும் கற்பிக்க மாநிலம் முழுவதும் 'ஆயிரம், ஆயிரம் அறிவியல் திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட்டது. அதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சபரிநாதன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பழனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'எங்கும் அறிவியல், யாவும் கணிதம்' என்ற தலைப்பில் பேசினார். மேலும் அவர் கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களை அறிவியல் மற்றும் கணிதத்தில் வளர்த்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து எளிய அறிவியல் பரிசோதனைகள் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வானவில் மன்ற கருத்தாளர்கள் நவீனா, பவதாரணி, தலைமை ஆசிரியர் மணி, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.