அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
ஏளூர் ஊராட்சியில் அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
புதுச்சத்திரம் அருகே உள்ள ஏளூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கலா, ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் பூபதி, நித்யா பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 3-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் 7 தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளர் கனகவள்ளி பயிற்சி அளித்தார். அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் சுசீலா, மகாலட்சுமி, சண்முகப்பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 15 கிராமங்களில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அறிவியல் திருவிழா நிகழ்ச்சிகள் நடந்ததாகவும், அதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.