சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க வேண்டும்

அரசு, தனியார் கல்லூரிகளிலும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
அரசு, தனியார் கல்லூரிகளிலும் சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தேசிய கருத்தரங்கம்
இந்திய சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான சிறப்பு முகாம் தர்மபுரியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அடுத்து வரும் ஒரு ஆண்டில் இந்திய சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய சமூக பணி மற்றும் திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் இருந்து சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவர்கள், பிரதிநிதிகள் தர்மபுரி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சாரண, சாரணியர் இயக்கத்தின் தேசிய அளவிலான கருத்தரங்கம் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்றது. அகில இந்திய தலைவர் பெங்களூருவை சேர்ந்த மெக்கி தலைமை தாங்கினார். இயக்க செயலாளர் சீமாரதி, இயக்கத்தின் பொருளாளர் பத்மினி பிள்ளை, மலேசியா நாட்டின் பிரதிநிதி குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகராட்சிகளின் நிதி மேலாண்மை ஆலோசகரும், இயக்கத்தின் தமிழக தலைவருமான ரவிக்குமார் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
ஒழுக்கமான மாணவர்கள்
அனைத்து பள்ளிகளிலும் பாரத சாரண, சாரணியர் இயக்கம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் சமூக சேவை மனப்பான்மையுடன் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் தொடர்ந்து திசை மாறாமல் ஒழுக்கத்துடன், தேசப்பற்று மிக்கவராக உருவாவதற்கு நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளிலும் பாரத சாரண, சாரணியர் இயக்கம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு சமூக சேவை, தேசப்பற்று மற்றும் ஒழுக்கமான கல்வி குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். சாரண, சாரணியர் இயக்கத்தில் உள்ள ஏழை, நடுத்தர மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கருத்தரங்கில் எடுக்கப்பட்டது.






