தனியார் நிறுவன உரிமையாளருக்கு கத்திக்குத்து
தனியார் நிறுவன உரிமையாளரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
கோவை
தனியார் நிறுவன உரிமையாளரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியார் நிறுவனம்
கோவை மரக்கடை அருகே என்.எச். ரோட்டை சேர்ந்தவர் முஜீப்ரகுமான் (வயது 43). இவர் உக்கடம் ஜி.எம். நகரில் பெட் மற்றும் தலையணை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய கடை அருகே மற்றொரு கடையில் கோட்டை மேட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார்.
அந்த பெண், முஜீப்ரகுமானிடம் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், புதிய தொழில் தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர், அந்த தலைய ணை, பெட்சீட் கவர் விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். நாம் இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என்று கூறியுள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து தலையணை மற்றும் பெட்ஷீட் தயார் செய்து விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் நடத்தையில் அவருடைய கணவர் முகமது அப்துல்லாவுக்கு (32) சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று முஜீப்ரகுமான் கோட்டை மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த முகமது அப்துல்லா, முஜீப் ரகுமானிடம் தகராறு செய்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த முகமது அப்துல்லா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முஜீப்ரகுமானை குத்தினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது அப்துல்லாவை கைது செய்தனர்.