2 பேர் மீது அரிவாளால் தாக்குதல்
நீடாமங்கலத்தில் ஆட்டை அடித்து கொன்றதை தட்டிக்கேட்ட 2 பேரை அரிவாளால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலத்தில் ஆட்டை அடித்து கொன்றதை தட்டிக்கேட்ட 2 பேரை அரிவாளால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தனர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாப்பையந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் மாதேஷ் (வயது19). இவருடைய உறவினர் சந்திரசேகரன் (50). இவர் மகேந்திரன் வீட்டில் தங்கியிருந்து நீடாமங்கலம் உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் பாப்பையந்தோப்பு பகுதிக்கு 5 பேர் வந்தனர். அப்போது மகேந்திரன் வீட்டில் கட்டியிருந்த ஆட்டை கட்டையால் தாக்கி உள்ளனர்.
ஆட்டை அடித்து கொன்றனர்
ஆடு கத்தும் சத்தம் கேட்டு மாதேஷ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் அங்கு வந்து அவர்களை தட்டிக்கேட்டுள்ளனர். ஆனால் ஆட்டை தலையில் அடித்து கொன்று விட்டு மாதேஷ், சந்திரசேகரன் ஆகியோரை இரும்பு கம்பியாலும், அரிவாளாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் 5 பேர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டனர்.
இதில் காயம் அடைந்த சந்திரசேகரன் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
4 பேர் கைது
இதுகுறித்து மாதேஷ் நீடாமங்கலம் போலீசில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டை கொன்று மாதேஷ், சந்திரசேகரனை தாக்கியதாக கொட்டையூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி மகன் சிவா (25), கொத்தமங்கலம் மாதாகோவில் தெருவைச்சேர்ந்த ஆசீர்வாதம் மகன் லோகநாதன் (22), பாப்பையந்தோப்பு பகுதியைச் சேர்ந்த அழகேசன் மகன் அரவிந்த் (23), கொட்டையூர் கும்பகோணம் ரோடு பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் அஜய் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கொட்டையூர் கும்பகோணம் ரோடு பகுதியைச் சேர்ந்த திவாகர் (23) என்பவரை போலீசார் தேடி வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டை சூறையாடினர்
இதேபோல இவர்கள் 5 பேரும், கீழகடம்பூர் பாமணியாற்றங்கரை பகுதியில் வசிக்கும் சிவராமன் என்பவர் வீட்டிற்குச் சென்று முன்விரோதம் காரணமாக சிவராமன் மகன் கார்த்திகை தேடியுள்ளனர். அவர் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சூறையாடினர்.
இதுகுறித்து சிவராமன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார், சிவா, லோகநாதன், அரவிந்த், அஜய், திவாகர் ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.