கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு
தோகைமலை அருகே மிளகாய் பொடி தூவி கொத்தனாரை அரிவாளால் வெட்டிய தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொத்தனார்
கரூர் மாவட்டம், தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போத்துராவுத்தம்பட்டி ஊராட்சி இருப்புக்குழியை சேர்ந்த சிவக்குமார் மகன் அஜித்குமார் (வயது 27). இவர் ஈரோடு பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது தங்கையை அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் புருஷோத்தமன் என்பவர் திருமணம் செய்வதற்காக யாருக்கும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து ஈரோட்டில் வேலை செய்த அஜித்குமாருக்கு அவரது தந்தை சிவக்குமார் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அஜித்குமார் ஈரோட்டில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தனது பெற்றோருடன் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.
தகராறு
இதனை அடுத்து தனது தாய்மாமா பாலு என்பவருடன் சென்று புருஷோத்தமன் தந்தை ராமசாமியிடம் எனது தங்கையை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதனால் அஜூத்குமாருக்கும், ராமசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த பாலு, அந்த பெண்ணை ஒப்படைத்த பின்பு பேசிக்கொள்ளலாம் என்று இருவரையும் சமாதானம் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி மாலை இருப்புக்குழியில் உள்ள பால்காரர் வீராசாமி என்பவர் வீட்டிற்கு பால் வாங்குவதற்காக அஜித்குமார் சென்றுள்ளார். அப்போது ராமசாமி அவரது மனைவி ரேவதி மற்றும் ராமசாமியின் மாமியார் ஆகியோர் அஜித்குமாரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அஜித்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவியதாக தெரிகிறது.
அரிவாள் வெட்டு
பின்னர் ராமசாமி-ரேவதி ஆகியோர் தகாதாவார்த்தைகளால் அஜித்குமாரை திட்டி கொலை மிரட்டல் விடுத்து, அரிவாளால் வெட்டி உள்ளனர். இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அஜித்குமாரின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ராமசாமி-ரேவதி தம்பதியின் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் காயம் அடைந்த அஜித்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின்பேரில், ராமசாமி, ரேவதி, ராமசாமியின் மாமியார் ஆகிய 3 பேர் மீது தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.