மாமியாருக்கு அரிவாள் வெட்டு
திருமக்கோட்டையில் மாமியாருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது செய்யப்பட்டார்
திருமக்கோட்டை:
திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 46). பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்களுக்கு நிவேதா (22) என்கிற மகளும், கோகுல்(20) என்ற மகனும் உள்ளனர். ரவிச்சந்திரன் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்வது வழக்கமாம். இதனால், வெறுப்படைந்த தமிழரசி தனது பெயரில் உள்ள நிலத்தை மகள் நிவேதா பெயருக்கு எழுதி கொடுத்து விட்டாராம். இதனை அறிந்த ரவிச்சந்திரன் மனைவியிடம் தகராறு செய்து சொத்தை தனது பெயருக்கு மாற்றித்தர கேட்டுள்ளார். இதை தனது தாய் சந்திராவிடம்(65), தமிழரசி கூறியுள்ளார். இதுகுறித்து திருமக்கோட்டை போலீசில் புகார் அளிக்க தமிழரசியும், அவரது தாயும் கடைவீதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரவிச்சந்திரன் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் நீ தான் என்று கூறி மாமியார் சந்திராவை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.